Sunday, February 28, 2010

தாய் மண் தேடி

இரண்டரை ஆண்டு ஆகிவிட்டது என் இனிய தமிழ் மண்ணிலிருந்து உத்திர பிரதேசம் வந்து. புதியதாய் ஒரு மொழி, புதியதாய் ஒரு இடம்,புதியதாய் ஒரு கலாசாரம் பார்க்கத்தான் வடநாட்டிற்கு வந்தேன்.

வேகமாய் உயர்ந்தது சம்பளம். அதே வேகத்தில் செலவும்.

என் இந்தி உச்சரிப்பை கேட்டு இன்று நகைப்பவர்கள் குறைவு, இருந்தாலும் அர்த்தம் தெரியாமல் நான் பயன்படுத்தும் வார்த்தைகள் அதிகம்.

ஒரு சாலை போக்குவரத்து காவல் அதிகாரியிடம் இப்படி நண்பர்கள் பயன்படுத்தும் வார்த்தையை பயன்படுத்த(yaar), அவர் அதற்கு விளக்கம் கேட்க, தமிழன் என்று சொல்லி தப்பித்தேன். நல்ல வேளை சபையில் பயன்படுத்த கூடிய வார்த்தை தான்.

ஆண்பால் பெண்பால் தெரியாமல் கூட்டத்தில் பேசி சிலரை வெறுப்படைய செய்ததுண்டு

அழகு பெண்கள் ஆயிரம் இங்கே ஆனால் மனதில் நிற்பதில்லை.

இங்குள்ள மக்கள் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். எல்லா விழாக்களிலும் நடை பயிலும் குழந்தை முதல் நரை கொண்ட முதியவர் வரை எல்லோரும் ஆட்டம் தான்.ஆனாலும் மனம் ஒட்டவில்லை—ஏன்? விடை தேடுகிறேன்.

புழுதி கொண்ட இந்த மண்ணில் மனமும் புழுதி ஆகிவிட்டதோ!

என் கிராமத்து மண் வாசனையை இந்த புழுதி, புகைக்கிடையே தேடினால் கிடைக்குமா?

இளங்காலை பொழுதில்,
காற்றே இசைக்கருவி,
என் இறக்கை படைக்கும் இசையருவி
என
ரகுமானுக்கு இசை கற்றுகொடுக்கும்
பறவைகள் எங்கே?

வாசனையிலேயே பசியை தூண்டும்
நம்மவூர் சாப்பாடு எங்கே
இருநூறு ரூபாய்க்கும் கிடைப்பதில்லை இங்கே

இங்கு மனம் ஏன் ஒட்டவில்லை ?

மண்ணும்,உணவும், மொழியும் ஆன்மாவுடன் ஒத்து போகவில்லையோ?

கேள்வியே பதில் ஆக தேடல் தொடர்கிறது.